அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – அடுத்த வாரத்தில் தொடங்க திட்டம்


 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக் கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கப்படும். கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சேர்க்கைப் பணிகள் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கிடையே, கடந்த ஆண்டு கரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியது. எனினும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்டன. இதனால், மாணவர் சேர்க்கை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனியார் பள்ளிகள் ஏப்ரல் மாதத்துக்குள் சேர்க்கையை முடித்து விடுகின்றன. அதற்கேற்ப அரசுப் பள்ளிகளும் சேர்க்கைப் பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டுமென பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டன.

இதையடுத்து, வரும் கல்வியாண்டுக்கான(2023-24) அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘அரசுப் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, விருப்பமுள்ள பெற்றோர் 1 முதல் 9-ம் வகுப்பு வரை சேர்க்கைக்கு அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் வழங்கப்படும்’’ என்றனர்.


Leave a Comment