ஆசிரியரை தாக்க முயற்சி: 6 மாணவர்கள் சஸ்பெண்ட்


 

ஆம்பூர் அருகே, பள்ளி ஆசிரியரை தாக்க முயன்ற ஆறு மாணவர்கள், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.

திருப்பத்துார் மாவட்டம், மாதனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தாவரவியல் ஆசிரியராக சஞ்சய், 40 என்பவர் பணியாற்றி வருகிறார்.பிளஸ் 1 படிக்கும் மாணவர்களிடம் நேற்று முன்தினம், ‘ரெக்கார்ட் நோட்’ சமர்ப்பிக்கும்படி கூறினார். இதில், 20 மாணவர்கள் சமர்ப்பிக்கவில்லை. அவர்களிடம், பெற்றோரை அழைத்து வர உத்தரவிட்டார். ஆத்திரமடைந்த மாணவர்கள், ஆசிரியர் சஞ்சயை ஆபாசமாக பேசி, அவர் மீது முட்டை வீசி தாக்க முயன்றனர். ஆசிரியர் தப்பியோடினார்.

இந்நிலையில், அதே மாணவர்கள் வகுப்பறையில் பாய் போட்டு படுத்து, அலைபேசியில் ‘வீடியோ கேம்’ ஆடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த மற்ற ஆசிரியர்களை, விரட்டியடித்தனர். இந்த விவகாரம், சக மாணவர்களால் வீடியோவாக எடுக்கப்பட்டு பகிரப்பட்டது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்து, ஆசிரியரை ஆபாசமாக பேசிய மாணவர்கள், வீடியோ எடுத்த மாணவர்களையும் அடித்து, உதைத்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் வேலன் விசாரணை நடத்தி, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினார். வாணியம்பாடி சப் – கலெக்டர் காயத்ரி, பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, ஆசிரியரை தாக்க முயன்ற ஆறு மாணவர்களை, ‘சஸ்பெண்ட்’ செய்து, தலைமை ஆசிரியர் வேலன் நேற்று உத்தரவிட்டார்.


Leave a Comment