குடியரசு தின சிறப்பு வாழ்த்துக்கவிதை – ஆசிரியர் திரு. சீனி.தனஞ்செழியன்


குடியரசில் குதூகலிப்போம்
எங்கள் நாடு
பூமியின் பூக்காடு
எங்கள் ரத்தநாளங்களில் புடைத்து நிற்கிறது தாயகப்பற்று
முன்னோர்களின் தியாகத்தில்
அளப்பறிய வீரத்தில்
அவர்களின் உதிரத்தில்
உயரக்கண்டோம் தேசியக்கொடி
இங்குதான்
திருநீறும் சிலுவையும் கைக்கோர்க்கும்
பசுமையும் காவியும்
பகைமை துறக்கும்
சம்மதமாய் எம்மதமும் 
ஏற்கும் எந்நாடு 
பொன்விளையும் புகழோடு
குண்டு வெடிக்குமோ என 
குமுறல் இல்லை
துப்பாக்கி தாக்கிடும் 
துயரங்கள் இல்லை
பதுங்கு குழி வாழ்க்கையில்லை
பயமே வாழ்வாய் ஆனதில்லை
யாவரும் பேசலாம்
தவறென்றால் யாவரையும் பேசலாம்
அனைவர்க்கும் உண்டிங்கு உரிமை
அதுவே எம் தாயகத்துப் பெருமை
நாங்கள் வெள்ளையையே வெறுத்தொதுக்கிய கறுப்பழகர்கள்
நிறபேதங்களால் மட்டுமல்ல
பிறபேதங்களாலும்
எங்களைப் பிளவுபடுத்த முடியாது
எங்கள் ஒற்றுமைச்சங்கிலி நீசபுத்திக்கயவர்களால் ஒருபோதும் உடையாது
இன மொழி மதம் கடந்த 
மகத்துவ மனிதர்கள் நாங்கள்
இந்தியா தானெங்கள் சுவாசம்
உலகே எங்கள் பெருமை பேசும்
தாயினும் மேலாய்
உணர்விலும் உளத்திலும் நிறைந்திருக்கிறது எங்களுக்கு தேசப்பற்று
உலகம் உய்யட்டும் எங்களைக் கற்று
கயமைகள் விலக 
நன்மைகள் பெருக
அமையட்டும் இக்குடியரசு
வறுமை நீங்கி வளமை நிரம்பக் கொட்டட்டும் வெற்றிமுரசு
சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
திருவலம்-632515,
வேலூர் மாவட்டம்.


Leave a Comment