குரூப் 4 தேர்வு – 19 நாட்களில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம் – 28ம் தேதி கடைசி நாள்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடங்கள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7138 இடங்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. 

மொத்தம் குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கான 81 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. 

விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை

இத்தேர்வுக்கு விண்ணப்பித்தல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. அன்று முதல் டிஎன்பிஎஸ்சியின் இணையதளம் மூலம் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதி ஆகும். இதனால், தேர்வு எழுத அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இதனால், 10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். அதிக அளவில் இளைஞர்கள் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். இதனால் நேற்று மாலை வரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது.

28ம் தேதி இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம்

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:

குரூப் 4 தேர்வுக்கு விண்ணபிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 7 லட்சத்து 8 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பிக்க கடைசி நாள் வரை காத்திராமல் இப்போதே விண்ணப்பிப்பது தேர்வர்களுக்கு நல்லது. ஏனென்றால் கடைசி நாட்களில் அதிகமானோர் ஒரே நேரத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தால் ஏதாவது பிரச்னை எழுவதற்கு வாய்ப்புள்ளது. 

இதனால், தேர்வர்களுக்கு பிரச்னை மற்றும் டென்சன் தான் ஏற்படக்கூடும். எனவே, தேர்வர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். குரூப் 4 தேர்வுக்கு வருகிற 28ம் தேதி இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து ஜூலை 24ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment