ஞாயிறன்று பருவத்தேர்வு: மாணவர்கள் அதிருப்தி


விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்.எஸ்சி(கணினி அறிவியல்) பட்டப் படிப்புகளை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் நடப்புகல்வியாண்டுக்கான பருவத்தேர்வு (ஆகஸ்ட் – செப்டம்பர்) அட்டவணையை பல்கலைக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

பிப்.12-ல் தேர்வு: அதன்படி பருவத்தேர்வுகள் ஜன.30-ம் தேதி தொடங்கி பிப்.23-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான கால அட்டவணையில் பிப்ரவரி 12-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று தரவுதள மேலாண்மை அமைப்பு, மின் வணிகம், மருத்துவச் சுற்றுலா உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறைக்கு மாறாக… வழக்கமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். ஆனால், புதிய நடைமுறையாக தற்போது, பட்டப் படிப்புகளுக்கான பருவத் தேர்வையும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் நடத்த அண்ணா பல்கலை. முடிவு செய் துள்ளது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் இது விவாதப் பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment