தமிழக மாணவர்களுக்கு பாடத்திட்டக் குறைப்பா?- அமைச்சர் அன்பில் பதில்


 

பாடத்திட்டத்தைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

”ஸ்மார்ட் போர்டு, இன்ட்ராக்டிவ் போர்டு, ஹைடெக் ஆய்வகம் ஆகியவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று ஆரம்பகட்டமாக 432 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க முடிவு செய்து, அந்தப் பணியைத் தொடங்கி இருக்கிறோம். இன்று முதல் 5 நாட்களுக்கு இந்தப் பயிற்சி ஆன்லைனில் நடைபெறும்.

அவர்கள் அடுத்தகட்டமாக மற்ற ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளார்கள். அந்த வகையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலை, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க உள்ளோம். இந்த நிகழ்வில் கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) தளத்தில் பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த விவரங்களைப் பதிவேற்றம் செய்வது குறித்தும் பயிற்சி வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்குத் திடீரென 7 மாதங்களில் பொதுத் தேர்வு என்று அறிவிக்க முடியாது. பாடத்திட்டத்தைக் குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு மழலையர் வகுப்புகள் கட்டாயம் என்பது விதிமுறைகளில் இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்”.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


Leave a Comment