‘நம்ம ஸ்கூல்’ திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் அகன்ற தொடுதிரை வசதி


    ஈரோடு:
மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட் பட்ட 32 அரசுப் பள்ளிகளுக்கு அகன்ற
தொடுதிரை மற்றும் கணினி, மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை பெங்களூருவைச்
சேர்ந்த தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது.

    தமிழகத்தில்
செயல்படும் அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பள்ளிக்குத்
தேவையான வசதிகளை மேம்படுத்த ‘நம்ம ஸ்கூல்’ எனும் திட்டத்தை அரசு
அறிவித்துள்ளது.

    இத்திட்டத்தின் மூலமாக அரசுப் பள்ளியில்
பயின்ற முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், பெற்றோர் மற்றும்
புரவலர்களிடம் இருந்து நன்கொடைகளைப் பெற்று, பள்ளிகளின் அடிப்படை வசதிகளை
மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

    இத்திட்டத்தின்படி,
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசுப் பள்ளிகளில், 32
நடுநிலைப் பள்ளிகளுக்கு அகன்ற தொடுதிரை ஸ்மார்ட் போர்டு, லேப்டாப்,
மாணவர்கள் அமர நாற்காலி, மேசைகள், இரும்பு பீரோ உள்ளிட்டவற்றை, பெங்களூவைத்
தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆலிஸ் ப்ளூ பிரைவேட் லிமிடெட் என்ற
நிறுவனத்தினர் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

    இந்நிறுவனத்தின்
உரிமை யாளர் சித்த வேலாயுதம் கூறும்போது, ‘நான் மொடக்குறிச்சி
ஒன்றியத்துக்கு உட்பட்ட பூந்துறை சேமூர் பகுதியைச் சேர்ந்தவன் என்பதால்,
எங்கள் பகுதி அரசுப் பள்ளிகளை முதற்கட்டமாக தேர்வு செய்து வசதிகளைச் செய்து
கொடுத்துள்ளேன். ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள்
நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.


Leave a Comment