நவோதயா பள்ளிகளில் 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 11 இல் நுழைவுத்தேர்வு!


 

நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவுத்தேர்வு அறிவிப்பு:

இந்திய அரசினால் திறன் வாய்ந்த மாணவர்களுக்கு சிறப்பு கல்வி வழங்க நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. இது இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான நவோதயா வித்யாலயா சமிதியினால் நடத்தப்படுகிறது. சிறப்பு பள்ளிகளுக்கு இணையான தரம் கூடிய கல்வித்திட்டத்தை அனைத்து மாணவர்களும் அவர்களது குடும்ப வருமானம், சமூகநிலை எத்தகையதாக இருப்பினும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.

நவோதயா பள்ளிகள் தமிழகத்தை தவிர்த்து நாட்டின் பல இடங்களில் அமைந்துள்ளன. 2010 வரை ஏறத்தாழ 593 பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் நடத்தப்படும் அனைத்திந்திய நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட போது நாடு முழுவதிலும் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் 47 ஆயிரம் இடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்த தேர்வினை 16 ஆயிரத்துக்கு மேற்பட்ட மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Leave a Comment