மாணவர் சேர்க்கையை துவக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு


முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை:

ஒவ்வொரு நாளும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, அரசு பள்ளிகளில் புதுமையான வகுப்பறைகளை ஏற்படுத்த வேண்டும்.

எத்தகைய அசாதாரண சூழலையும் சமாளிக்கும் வகையில், மாணவர்களை உருவாக்க வேண்டும். அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், ஒன்று முதல், மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

இதை வரும் கல்வி ஆண்டில் உயர்த்தும் வகையில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.

இதற்காக, ‘அரசு பள்ளிகளை கொண்டாடுவோம்’ என்ற பெயரில், இன்று முதல், 28ம் தேதி வரை, அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.

அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகள், சிறப்பு அம்சங்களை, பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தமிழ் வழியில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, அரசு பணியில், 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

ஆறு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, உயர்கல்வி படிக்க, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க, உயர் கல்வி செல்லும் மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டங்கள் அமலில் உள்ளதை பெற்றோருக்கு தெரியப் படுத்த வேண்டும். இந்த வழிமுறைகளின் படி, மாணவர் சேர்க்கையை துவக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Leave a Comment